இன்றைய திகதியில் மாற்றியமைத்துக் கொண்ட உணவு பழக்கவழக்கங்களாலும், வாழ்க்கை நடைமுறைகளாலும் பலவகையான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விழிப்புணர்வு இருந்தாலும் இவ்வகையான நோயிற்கான சிகிச்சையின் போது ஏற்படும் வலியை நினைத்தே பலரும் முறையான சிகிச்சையை முறையான காலக்கட்டத்தில் பெற்றுக்கொள்வதில்லை. நோய் முற்றிய பிறகு, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். இவர்களுக்காகவே தற்போது வலிதணிப்பு சிகிச்சை (palliative care) என்ற ஒரு மருத்துவப்பிரிவு அறிமுகமாகி வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த வலி தணிப்பு சிகிச்சை முறைக்கு தற்போது அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இத்தகைய சிகிச்சை கைவிடப்பட்ட மற்றும் முற்றிய நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் விசடேமான சிகிச்சையாகும். இவர்கள் எஞ்சியுள்ள காலத்தில் புற்றுநோயின் வலியை உணராமல் இருப்பதற்கான சிகிச்சையாகும். நோயை குணப்படுத்த முடிந்தாலும் அல்லது முடியாவிட்டாலும் நோயின் தன்மையைக் குறைப்பது தான் இச்சிகிச்சையின் நோக்கமாகும்.

இத்தகைய சிகிச்சையை மருத்துவர்கள், தாதியர், சமூக ஆர்வலர்கள், உணவு ஆய்வாளர்கள், மன நல நிபுணர்கள் என பலர் அடங்கிய மருத்துவக் குழுவால் வழங்கப்படுகிறது. முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு இவ்வகையிலான சிகிச்சை அளிக்கும் போது, அவர்களின் நல மேம்பாட்டினை முன்வைத்து தான் அளிப்பார்கள். அதே சமயத்தில் மரணத்தின் வாயிலில் இருப்பவர்களுக்கு வழங்கக்கூடிய ஹோஸ்பைஸ் கேர் (hospice care) என்ற சிகிச்சைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. இதில் நோயாளி வலியை உணராமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்படுகிறது.

டொக்டர் D.விஜய்ஸ்ரீ மகாதேவன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்