அட்டன் டிக்கோயா நகரசபை எல்லை பகுதிக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை தற்காலிகமாக நுவரெலியா பிரதேச சபையின் எல்லை பகுதியில் கொட்டுவதற்கு அண்மையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அட்டன் குடாஓயா குப்பை கூழத்தில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பொதுமக்களால் செய்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இந்த குப்பைகள் நுவரெலியா பிரதேச கட்டுப்பாட்டு பகுதியான பத்தனை பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

தற்பொழுது கொட்டப்பட்டு வரும் இந்த குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பத்தனை பிரதேச பொதுமக்கள் இன்று காலை பத்தனை நகரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். சுமார் 2 மணித்தியாலங்கள் இவ்வார்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இந்த பிரதேசத்தின் பொதுமக்கள் உள்ளிட்ட மதகுருமார்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக இடம் வழங்கப்பட்டு அட்டன் குப்பைகள் நுவரெலியா பிரதேச சபையின் எல்லை பகுதியில் சேகரித்து கொட்டப்படுகின்ற அதே இடத்தில் பல மாதங்களாக சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவதனால் அதிகமான குப்பைகள் சேர்ந்து இப்பிரதேசத்தில் துர்நாற்றம் அதிகமாக வீசி வருவதுடன் நோய்களும் விரைவில் பரவுக்கூடிய நிலை உருவாகி இருப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பதாதைகளையும் கோஷங்களையும் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

உடனடியாக நுவரெலியா பிரதேச சபை இதற்கான நடவடிக்கையை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என இதன்போது போராட்டகாரர்கள் வழியுறுத்தி கொண்டனர்.

இந்த நிலை தொடருமானால் இப்பகுதியில் காணப்படும் இயற்கை நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இப்பயணிகளின் வருகையும் குறைவடையும் என சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.