களு கங்கை அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவும் வகையில் ஐம்பத்தைந்து இலட்சம் குவைத் தினார்களை கடனாக அளிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் குவைத்தில் நேற்று (31) கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் குவைத் சார்பில் அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் பிரதி இயக்குனர் அஹமட் அல் ஒமரும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு இதற்கான மூல ஒப்பந்தம் இவ்விரு நாடுகளிடையே கைச்சாத்திடப்பட்டிருந்தது. மொத்தமாக பத்து மில்லியன் குவைத் தினார்கள் இந்த ஒப்பந்தம் மூலம் களு கங்கை அபிவிருத்தித் திட்டத்துக்குக் கிடைக்கவுள்ளது.

இந்நிதியுதவி மூலம் மகாவலி அபிவிருத்தி வலயப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை அதிகளவில் உருவாக்குவதன் மூலம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.