பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் அவர்கள் தரப்பு சட்டத்தரணியாக   வாதாடுவேன் என  பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ  சுமந்திரன் தெரிவித்துள்ளார் 

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும் ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை.  

இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை  வழங்குங்கள்  எனக் கோரி  இன்று  ஒன்பதாவது நாளாக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த போதே அவர்  மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நானும் பாராளுமன்ற உறுப்பினர்  சிறிதரன்  அவர்களும்  காணி உரிமையாளருடன் சுமூகமான  முறையில் பேசி  இக் காணியினை பெற்றுத்தருவதற்கு பார்க்கின்றோம்.

காணி உரிமையாளர்  இல்லை  நான்    நீதிமன்றம்   செல்லப்போகிறேன் எனக் கூறினால் நீங்கள்  சம்மதம்  வழங்கினால் உங்கள்  தரப்பு சட்டத்தரணியாக   வாதாடுவேன் எவ்வாறாயினும் ஒரு நல்ல தீர்வினைப்  பெற்றுத் தருகின்றோம். அதுவரை உங்கள் போராட்டத்தை நிறுத்த முடியுமா?  என  கேட்டுக் கொண்டார் 

அதற்குப் பதிலளித்த  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்   நீங்க காணி உரிமையாளருடன்  பேசி அல்லது  நீதிமன்றத்தில்  எமக்கு சார்பாக  வாதாடியாவது எனக்கு இக் காணியை  பெற்றுத்தாருங்கள்.   அதுவரை நாங்கள் இவ்இடத்திலையே  இருக்கின்றோம் போராட்டத்தை கைவிடமாட்டோம்   என தெரிவித்துள்ளனர்.