திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சென். கிளயார் தோட்ட டெவோன் பிரிவு தோட்ட குடியிருப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் மூன்று வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் ஒரு வீடு முற்றாகவும், ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் எரிந்துள்ளது.

இந்த வீடுகளில் குடியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், எனினும் அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடைகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.