திருமணம் சார் சஞ்சிகையொன்று வெளியிட்டுள்ள அட்டைப் படம் சமூக வலைதளங்களின் விவாதப்பொருளாகியுள்ளது.

கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஜோடி’ என்ற, தெற்காசிய திருமணம் சார் சஞ்சிகையின் இம்மாத வெளியீடு அண்மையில் வெளியானது. அதன் அட்டையில், தனுஸ்கா சுப்ரமணியம் என்ற மொடல் ஒருவர், இந்திய மணப்பெண் ஆடை அலங்காரங்கள் அணிந்து, மலராசனம் ஒன்றில் அமர்ந்திருக்கிறார். எனினும், கால்கள் தெரியும் வண்ணம் அவர் அந்தச் சேலையை அணிந்திருப்பது சர்ச்சையைக் கிளறிவிட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில், ரசனையான கற்பனை என்று சிலர் பாராட்ட, வேறு சிலர் கலாச்சாரக் கொலை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ஜோடி சஞ்சிகை நிறுவனம், பெண்மையைப் பிரதிபலிக்கும் இதுபோன்ற படங்களுக்காக இவ்வளவு கண்டனங்கள் எழத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.