தற்போதுள்ள சூழலில் ஒவ்வொருவரும் வருவாய் ஈட்டுகிறார்களோ இல்லையோ நாளாந்தம் வலியை ஈட்டுகிறார்கள். இந்த வலியை போக்க பல்வேறு நிவாரணங்களையும், வலி நிவாரணிகளையும், நிவாரண சிகிச்சைகளையும் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பிஸியோதெரபி என்ற ஒரு துறை வலியை குறைக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது.

எம்முடைய உடலின் இயக்க மற்றும் உணர்வு நரம்புகளை, மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொகுப்பு தொடர் தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடல் இயக்கத்தை மூளையின் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு சிலருக்கு ,சில நேரங்களில் தண்டுவடத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் எற்படுவதாலும், கட்டியால் அழுத்தம் ஏற்படுவதாலும், சாலையில் மிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதாலும் தண்டுவடப்பகுதிகளில் பாதிப்பு உண்டாகும். இதன் போது தண்டுவட எலும்பு முறிவதால், தண்டுவட நரம்புகள் மற்றும் நரம்பு தொகுதிகள் உடைந்த எலும்புகளுக்கிடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் அழுத்தப்படுகின்றன. இதன் காரணமாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடுகின்றன.

அதே சமயத்தில் ஒரு சிலருக்கு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து உடல் உறுப்புகளின் செயலிழப்பு அமையும். தண்டுவட எலும்பு முறிவு இருந்தால், பாதித்த பகுதிக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும், மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். இதனால் தசைகளிடையே இயக்கமின்மை, தோல் உணர்விழப்பு, மலம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். தண்டுவட நரம்பு மண்டலத்தில் அழுத்தம் மட்டும் இருந்தால், சிகிச்சைக்குப் பின், பிசியோதெரபி செய்து, முழுமையாக குணம் பெறலாம். அதே சமயத்தில் தண்டுவட முறிவுக்குப் பின்னரான சிகிச்சையின் போது,பாதிக்கப்பட்டவருக்கு படுக்கை புண் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான பிசியோதெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். வயது, தண்டுவட முறிவின் அளவு, தண்டுவட நரம்புகளின் செயல்பாடுகளை பொறுத்து, பிசியோதெரபி மூலம் தசைகளை வலுப்படுத்த முடியும். இந்த பயிற்சியை முழுமையாக மேற்கொண்டால், முறிவின் அளவைப் பொறுத்து ஒரு சிலரால் ஒரு ஆண்டிற்குள்ளாக நடக்க இயலும்.வேறு சிலருக்கு, இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படும். மேலும் சிலருக்கு சிறு உபகரணங்கள் உதவியோ அல்லது பிரத்யேக சக்கர நாற்காலியின் உதவியோ தேவைப்படும். 

டொக்டர் E,M.A, உசேன்,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்