நான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எது என்றால்  2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்து  பதவிகளை எல்லாம் விட்டு வெளியில் வந்த காலம் தான் என் வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்த காலம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்ற நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுகின்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நான் பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு வாக்களித்த 52 இலட்ச மக்களுக்கும் எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த ஐ.நா பொது செயலாளர்  பாங்கி மூனிற்கும், இங்கு வருகை தந்துள்ள மஹாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்னனுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

மேலும் தேசிய அரசாங்கத்தை நிறுவ உதவிய அனைவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கடந்த வருடம் தேர்தல் ஆண்டாகவே காணப்பட்டது. பெரும்பாலும் தேர்தல் நடைபெறும் காலங்களில் நாட்டின் அபிவிருத்தி வேலை திட்டங்கள் ஸ்தம்பிதம் அடைந்து இருக்கும்.

ஆனால் கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடைபெற்றாலும் நாட்டின் அபிவிருத்தியில் எந்த ஸ்தம்பிதமும் ஏற்படவில்லை.

அதுவும் நாம் பெற்ற பெறும் வெற்றி என்றே சொல்ல வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

என்னை சிலர் கேள்வி கேட்கின்றனர். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக கூறும் உங்களின் ஐந்து வருட சேவையின் பின்னர் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என என்னை வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கேள்வி கேட்கின்றனர். என்னுடைய பதில் என்னவென்றால், ஐந்து வருடம் பதவிகாலம் முடிவடைந்து என்னுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை விட ஐந்து வருடங்களின் பின்னர் நாட்டி நிலை என்னவாக இருக்கும் என்பதையே அனைவரும் சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் நாட்டின் எதிர்காலத்திற்காக செயற்பட வேண்டும்.

தற்போது சிலர் நல்லாட்சி நல்லது என்கின்றனர். சிலர் ஒன்றுமே நடக்கவில்லை என்கின்றனர். யார் எதை கூறினாலும் நாட்டு மக்களின் நன்மை கருதி எமது பயணத்தை முன்னெடுத்து செல்வோம்.