(எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்னவின் செயற்பாடுகள் இடையூறாக உள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது கடத்தப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் மற்றும் அவரது உறவினரான பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த இரத்னசாமி பரமானத்தன் ஆகியோரது கடத்தல் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே குற்றப் புலனயவுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் கடத்தல்கள் தொடர்பிலான சிறப்பு விசாரணையாளருமான  பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக மன்றில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கிக்கு அறிவித்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் அவர் இதன் போது நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார்.