நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நடைபெறும் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் முதலாவது ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ரஷ்யாவின் பிரபல இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மொஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் அலெக்சாண்டர் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நினைவு தூபியானது இரண்டாவது உலக யுத்த காலத்தில் உயிர் நீத்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

செஞ்சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மொஸ்கோ நகரின் இராணுவ கட்டளையிடும் அதிகாரியினால் கௌரவமாக வரவேற்கப்பட்டதுடன், விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 

நினைவு தூபிக்கு பூங்கொத்து வைத்து ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.

ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.