மார்பக மறுசீரமைப்பு செய்துகொண்ட ஒன்பது பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு பலியான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, மார்பக மறுசீரமைப்பு செய்துகொண்ட 359 பேருக்கு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்பக மறுசீரமைப்பின்போது பொருத்தப்படும் ஒருவகை சிலிக்கன் ஜெல்லுக்கும் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஏ.எல்.சீ.எல். எனப்படும் செல்லுக்கும் தொடர்பு இருப்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் முதன்முறையாக 2011ஆம் ஆண்டு மார்பக மறுசீரமைப்பு செய்துகொண்ட பெண் ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு பலியானார். எனினும், அப்போது இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிதாகவே இருந்தன. ஆனால் தற்போது 359 பெண்கள் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதால் இது குறித்த சடுதியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிலர், குறிப்பிட்ட அந்த சிலிக்கன் ஜெல்லை அகற்றி, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட்டிருந்தாலும் கூட, பலர் இதற்காக ‘கீமோதெரபி’ எனப்படும் கதிர் சிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை செய்துகொண்ட எல்லோரும் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.