மட்டக்களப்பு - கித்துள் குளத்தில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவேளை விஷேட அதிரடிப்படையினர் ஆகாயத்தை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தையடுத்து ஆற்றில் பாய்ந்து தப்பிக்கொள்ள முயற்சித்த நபர் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மரப்பாலம் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான கூலித்தொழிலாளியான சுப்ரமணியம் இளவரசன் என்ற நபரே உயிரிழந்தவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கித்துள் குளத்தில் சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற விஷேட அதிரடிப்படையினரைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதையடுத்து விசேட அதிரடிப்படையினர் ஆகாயத்தைநோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் சம்பவயிடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார்.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.