அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பிருந்துள்ளதாக, அந்நாட்டு புலனாய்வு பிரிவு தலைவர் உறுதிசெய்துள்ளார். இதனால் டிரம்ப் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா மோசடியில் ஈடுபட்டமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்பின், தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டமை தொடர்பான தமது அறிக்கையை அந்நாட்டு புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கையில் அமெரிக்கா புலனாய்வு பிரிவு தலைவர், ஜேம்ஸ் பி கோமி மற்றும் தேசிய பாதுகாப்பு தலைவர் மைக்கல் ரோகர்ஸ் இணைந்து தேர்தல் முறைகேட்டில் ரஷ்யாவின் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் குறித்த அறிக்கையில்  முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்பின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டமை, தொடர்பில் தமக்கு எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக தனது சமூகவலைத்தளம் ஊடாக கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் தலையீடு என்பது நிரூபணமாகவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தகவல் சில ஊடகங்கள் பரப்பிய பொய் வதந்தி எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் ரஷ்யாவுடன், டிரம்ப் தொடர்பு கொண்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும், புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யாவின் தேர்தல் முடிவு தலையீட்டை, அமெரிக்க புலனாய்வு மையம் உறுதி செய்துள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப் பல்வேறு சட்ட நெருக்கடிகளை சந்திக்க நேரிடுமென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.