கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று காலையில் வகுப்பறை அடித்து நொறுக்கப்பட்டதாகவும் இதனால் பதற்றநிலை ஏற்பட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.

அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் குழப்பம் விளைவித்தார்கள் என வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களையும் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு தெரிவித்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மாணவர்களுக்கான பரீட்சை ஆரம்பமாகியிருந்த  நிலையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களும் பரீட்சைக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதன் பின் மாணவர்களுக்கு உரிய வசதிகளை பெற்றுக் கொடுக்கவில்லை எனக் கூறி, கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகம் மாணவர்களினால் பல நாட்களாக முற்றுகையிடப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தன.

இதேவேளை அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் மாணவர்களினால் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.