அண்மைய காலங்களில் மருத்துவர்கள் குறித்த திகதிக்கு முன்னரே குழந்தைகள் பிறப்பது என்பது அதிகரித்து வருகிறது. 

பொதுவாக 40 முதல் 42 வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டும்.  மன உளைச்சல்  மற்றும் மன அழுத்தம். பேறு காலத்தில் தோன்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் 32, 36 வாரங்களில் குழந்தை பிறக்கிறது. 

பிரசவ காலத்தில் சர்க்கரை நோய் அதிகரிப்பது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, பிரசவத்தைப் பற்றிய பயம், அதனால் ஏற்படும் மன அழுத்தம் என்பது இயல்பானது.ஆனால், இதற்கெல்லாம் தங்களை தயார் செய்து கொள்வது என்பது தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது. வேலைக்குப் போகும் பல பெண்கள் கடைசி நாள் வரை அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் உடல் அளவிலும், மன அளவிலும் நிறைய அழுத்தம், அவர்களுக்கு இருக்கிறது. பிரசவ நாள் வரை நடப்பது, லேசான வேலைகள் செய்வது நல்லது தான். ஆனால், அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தில் இருப்பது, குறிப்பிட்ட திகதிக்கு முன்பே பிரசவம் ஆவதற்கான ஒரு காரணம். அம்மாவின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றால், 30 வாரங்கள் வரை குழந்தை சீரான வளர்ச்சியில் இருக்கும். அதன்பின் பிரச்சனை வரலாம். அம்மாவின் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், குழந்தையின் சர்க்கரை அளவு குறைந்துவிடும். இதுபோன்ற சூழலில் 30 சதவீத குழந்தைகள் 1.8 கிலோ எடைதான் இருக்கும். எடை குறைவாகப் பிறந்தால் இயல்பாகவே மூச்சுத் திணறல் வரும். இதுபோன்ற குழந்தைக்கு நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்திறனும் முழுமையாக இருக்காது. தொற்று, மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளும் வரலாம். வலிப்பு வருவதற்கான சாத்தியங்களும் உண்டு. குழந்தையின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் குளுக்கோஸ் செலுத்த வேண்டியிருக்கும். 25, 26 வாரங்கள் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதன்பின் ஸ்கேன் செய்து பார்த்தால், ஒரு சிலருக்கு கர்ப்பப் பையில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.

இதன் தொடர்ச்சியாக, பனிக்குடத்தில் உள்ள நீர் குறைந்து குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். தாய், சேய் இணைபுத் திசு (placenta) மூலம் 50 சதவீதம் ஊட்டச்சத்து குழந்தைக்கு கிடைக்கிறது என்றால், இந்த திரவத்தின் மூலம்தான் மீதமுள்ள சத்துக்கள் கிடைக்கின்றன. மருத்துவ ரீதியான காரணங்கள் எதுவும் இல்லாமல் நாள், நட்சத்திரம் பார்த்து குறிப்பிட்ட நேரத்தில்தான் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வலுகட்டாயமாக, 'சிசேரியன்' செய்யச் சொல்பவர்களும் தற்போது அதிகம். தவிர, பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் செய்து விட சொல்பவர்களும் உண்டு. பிரசவம் என்பது இயற்கை, பெண்களுக்கு கொடுத்துள்ள வரம். அந்த நேரத்தில் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.  அதனால் குறைபிரசவத்தைத் தடுக்க விரும்பும் பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தின் போது, மனதை இயல்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கவேண்டும். பிரசவ வலி என்பது குறித்து தேவையற்ற அச்சங்கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, முதியவர்கள் சொல்லும் நடைமுறை பழக்கங்களையும் பின்பற்றினால் குறைபிரசவத்தை தடுக்கலாம்.

டொக்டர் H, தீபா

தொகுப்பு அனுஷா.