அம்பாறை ஹிங்குரானையில் சட்ட விரோதமாக இயங்கிவந்த மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருளான ஸ்பிரிட் தயாரிக்கும் நிலையத்தினை முற்றுகையிட்ட மதுவரித்திணைக்களத்தினர் அங்கிருந்து சுமார் 34கோடி ரூபா பெறுமதியான 94ஆயிரம் லீற்றர் ஸ்பிரிட்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மதுவரித்திணைக்களத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போதே இவற்றினை மீட்டுள்ளதுடன் அங்கு பணிபுரிந்த மூன்று இந்தியர் உட்பட 13 பேரையும் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா,மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எம்.செல்வராஜா ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

ஹிங்குராகொட மகா வித்தியாலய வீதியில் குறித்த மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருளான ஸ்பிரிட் தயாரிக்கும் நிலையம் கடந்த நான்கு நாட்களாக இயங்கிவருவதாகவும் மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

பாரிய இயந்திரங்களுடன் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த உற்பத்திகள் மதுவரித்திணைக்களம் மற்றும் நிதியமைச்சில் பதிவுசெய்யப்படாத நிலையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த முற்றுகையின்போது சுமார் 94ஆயிரம் லீற்றருக்கு மேற்பட்ட ஸ்பிரிட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 34கோடி ரூபா இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் இது தொடர்பான முழுமையான விபரங்கள் விசாரணையின் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.