ஒரு சிலருக்கு வலது கால் பெருவிரலுக்கு அடுத்த விரல், பெருவிரலைக் காட்டிலும் பெரியதாக இருப்பதைக் காணலாம். ஒரு சிலர் இதனை பால்ய பருவத்திலேயே கண்டறிந்து சத்திர சிகிச்சை செய்துகொள்வார்கள்.  இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பின்னரும் ஒரு சிலருக்கு இத்தகைய விரலின் வளர்ச்சி அபிரிமிதமாகவேயிருக்கும். இதற்கு ஒரே முறையில் சத்திர சிகிச்சைகள் மூலம் தீர்வு காண இயலாது.பல்வேறு கட்ட சத்திர சிகிச்சைகள் மூலம் தான் இதனை குணப்படுத்த இயலும்.

ஒரு சில குழந்தைகளுக்கு இது  Congenital Macrodactyly எனப்படும் பிறவியிலேயே விரல் மிகை வளர்ச்சியிருக்கும். இதற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் ஒரு சிலர் இது பரம்பரையின் காரணமாகவும், மரபணு குறைபாடு காரணமாகவும் வருகிறது என்கின்றனர். வேறு சில ஆய்வாளர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குருதியோட்டம் இயல்பை விட அதிகமாக நடைபெறுவதால் தான் இவை ஏற்படுகின்றன என்கிறார்கள். அதனால் மருத்துவத்துறை இதனை localised gigantism என்று குறிப்பிடுகிறது. ஒரு சில குழந்தைகளுக்கு கால் பெருவிரல் அல்லது கை பெருவிரல்களிலும் ஏற்படுகிறது.

காலில் இத்தகைய பிரச்சினை ஏற்பட்டு, நடப்பதற்கும் சிரமமாகவும், கூடுதலான வலியும் இருக்குமேயானால் சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு. ஒரு சிலருக்கு பல முறை சத்திர சிகிச்சை அவசியப்படலாம். அதற்கு பின்னர் 3 மாத கால அவகாசத்தில் இத்தகைய பிரச்சினைக்கு ஒரு நல்லதொரு தீர்வு கிடைக்கும். ஆனால் இது அரிய வகை பிரச்சினை என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

டொக்டர் வி ராஜன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்