கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எத்தியோபியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர் சுமித் திஸாநாயக்க மூலம் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு அவர்களின் நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இன்றும் இங்குள்ள கடத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளளோம்.

சோமாலிய அரசாங்கத்துடன் நாம் எத்தியோப்பியாவுக்கான எமது தூதுவர் மூலமாக இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அங்கு என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை இங்கிருக்கும் அவர்களது உறவினர்களுக்கு நாம் தெரியப்படுத்தி வருகின்றோம்.

இதேவேளை, சர்வதேச கப்பல் நிறுவனத்துடனும் கடத்தப்பட்ட கப்பலுக்கு சொந்தமான டுபாயிலுள்ள அலோலா கப்பல் நிறுவனத்துடனும் கொழும்பிலுள்ள ஏ.பி.சி. பீலிக்ஸ் கப்பல் முகவர் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

கடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்றுவரைக்கும் எவ்வித பிரச்சினைகளோ, தீங்குகளோ இல்லாது நலமாகவுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிப்பதற்கு சோமாலிய அரசாங்கம் உதவியளிப்பதாக  கடத்தப்பட்ட ஆரிஸ்-13 என்ற கப்பலுக்கு சோமலிய அரசாங்கமும் பூன்ட்லாந்து மாநில அரசாங்கமும் பாதுகாப்பளித்து கண்காணித்து வருகின்றன.

குறித்த கப்பல் பூன்ட்லாந்து நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள கபோ துறைமுகத்தில் தரிந்து நிற்பதாகவும் அக்கப்பல் அடிக்கடி கண்காணித்து வருவதாகவும் எத்தியோபியாவிற்கான எமது தூதுவர் தெரிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.