கோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை  ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் என சர்வதேச வர்த்தகப் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்   நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை  ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார். அப்படியாயின் அவர் பதவியில் இருந்தபோது   இந்த விடயங்களை செய்திருக்கலாமே.  கே.பி.  கோத்தாவுடன்தான் இருந்தார். அந்த நேரம் எதுவும் செய்யாதவர்கள் இப்போது  ஏன் கூச்சலிடுகின்றனர் என்று தெரியவில்லை. 

இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை  விரைவில் கைச்சாத்திடப்படும். இது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன

மேலும் சீனாவுடனும்  உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. சீனா,  அம்பாந்தோட்டை வர்த்தக வலையத்தில் ஐந்து வருடங்களில்  6 பில்லியன்  டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது. 

சீனாவில் 6 வீத    பொருளாதார வளர்ச்சியும்  இந்தியாவில் 7 வீத பொருளாதார வளர்ச்சியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளுடனும் நாங்கள்   வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டால்   அது எமக்கு பாரிய சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக அமையும். 

அதுமட்டுமன்றி கொழும்பு நகரத்தை மிகப்பெரிய  சுதந்திர வர்த்தக வலையமாக  மாற்றியமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். அதாவது சிங்கப்பூரைப்போன்று கொழும்பு நகரை உருவாக்குவது தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.