ஹொங்கொங்கில், தற்கொலைக்கு முயன்ற ஒரு நபருடன் பேச்சுக் கொடுத்து அவரது மனதை மாற்றிய இளம் பொலிஸ்காரர் ஒருவர் ஒரே நாளில் இணையதள ‘ஹீரோ’ ஆகியிருக்கிறார்.

ஹொங்கொங்கில் பணியாற்றிவந்த பாகிஸ்தானியர் ஒருவர், கட்டட நிர்மாண வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு இடத்துக்குச் சென்று திடீரென அங்கிருந்த சுமார் 65 அடி உயரமுள்ள பாரந்தூக்கி ஒன்றின் மீது ஏறினார். பின், அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பெறப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சிலர் விரைந்தனர். அவர்களுள்  இருபது வயதே நிரம்பிய இஃப்ஸல் ஸப்ஃபார் என்ற இளம் பொலிஸ் வீரர், தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபருடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தபடியே அந்தப் பாரந்தூக்கியில் ஏறினார்.

ஒரு கட்டத்தில், இஃப்ஸல்லின் பேச்சினால் கவரப்பட்டு மனம் மாறிய அந்த நபர் தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு கீழே இறங்கினார். அவரை ஏனைய பொலிஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த நபரின் மனதை மாற்றிய இஃப்ஸல்லை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும் இந்தச் செய்தி பரபரப்பாகப் பரிமாறப்பட்டு வருவதுடன், இஃப்ஸல்லுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

“நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை. எனது பயிற்சிக் காலத்தில் சொல்லித்தரப்பட்டதையே நான் கடைப்பிடித்தேன். தற்கொலை செய்துகொள்ள முயன்றவரும் பாகிஸ்தானியர் என்பதால், அவரது தாய்மொழியான உருதுவில் பேசினேன். வேற்று மொழி பேசப்படும் ஒரு நாட்டில், பாதிக்கப்பட்ட ஒருவருடன் அவரது தாய்மொழியில் கதைத்தாலே அந்தப் பிரச்சினையை சுலபமாகத் தீர்த்துவிடலாம். நானும் பாகிஸ்தானியன் என்பதால் என்னால் அவருடன் உருதுவிலேயே பேச முடிந்தது” என்று அடக்கமாகக் கூறுகிறார் இஃப்ஸல்!