எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் முதலாவது வதிவிடத் தூதுவராக சுமித் தசநாயக்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர், ஆப்பிரிக்க யூனியனுக்கான இலங்கைப் பிரதிநிதியுமாவார்.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டு ஜனாதிபதி முலட்டு தெஷோமியைச் சந்தித்து தனது நியமனக் கடிதத்தைக் கையளித்தார் சுமித் தசநாயக்க. இதன்போது, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களின் வாழ்த்துக்களையும் அவர் பரிமாறினார்.

இவரது பதவியேற்பு நிகழ்வு அந்நாட்டின் தேசிய மாளிகையில் ஒரு சிறு விழாவாக நடத்தப்பட்டது. இதன்போது சுமித் தசநாயக்கவுக்கு இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

இலங்கை - எத்தியோப்பியா இடையேயான அரசியல் உறவுகள் 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. எனினும், எத்தியோப்பியாவுக்கான வதிவிட தூதுவர் ஒருவர் இதுவரை காலமும் நியமிக்கப்படவில்லை.

எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து கடந்த மாதம் இலங்கைத் தூதுவருக்கான அலுவலகம் எத்தியோப்பியாவில் அமைக்கப்பட்டது.