கிண்ணியாவில் நிலவி வரும் சுகாதார ரீதியிலான அவசர நிலை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம்.என்.அமீன் இந்த வேண்டுகோளை கடிதம் மூலம் விடுத்துள்ளார்.

கிண்ணியாவில் டெங்கு நோய்க்கு பதின்மூன்று பேர் பலியாகியுள்ளனர். நேற்று (14) செவ்வாய்க்கிழமை மட்டும் இருவர் டெங்குவுக்கு பலியானார்கள். இதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதத்தில், ‘‘திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் டெங்கு தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாகப் பதின்மூவர் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். இது, மருத்துவ ரீதியிலான அவசர நிலையாகக் கருதப்படவேண்டும். எனவே, இதைக் கருத்திற்கொண்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தேவையான மருத்துவ உதவிகளையும், போதியளவு மருத்துவர்களையும் கிண்ணியாவுக்கு அனுப்பி தற்போதைய அச்சுறுத்தலைக் களையவேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.