திருட்டுத்தனமாக கெமரா ஒன்றை குளியலறையில் பொருத்தி, கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளிக்கும் காட்சியைப் பதிவுசெய்த குழாய் பொருத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிறிஸ்டோஃப் கர்வாத் (36) என்பவர் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர். குழாய் பொருத்துனரான இவர், அண்மையில் ஒரு வீட்டின் குளியலறையில் குழாய்களைச் சரிசெய்வதற்காகச் சென்றிருந்தார்.

திடீரென, அந்த வீட்டை இரகசியமாக நோட்டமிடும் ஆசை எட்டிப் பார்க்கவே, யாருக்கும் தெரியாமல் ஒரு இரகசிய கெமராவை குளியலறையில் பொருத்தினார்.

ஆனால், கெமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட வீட்டு உரிமையாளர், குழாய் பொருத்துனரின் திருவிளையாடல் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன் பேரில் கர்வாத்தின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்தனர். அவரது வீட்டைச் சோதனையிட்டதில், ஏற்கனவே பல வீடுகளில் இதுபோன்று இரகசியமாக கெமராக்களை அவர் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது கணினியில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளிக்கும் ஏழு வெவ்வேறு காட்சிகள் பதிவாகியிருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும், இணையத்தில் இருந்து பாலியல் காட்சிகள் மற்றும் படங்கள் தரவிறக்கப்பட்டிருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கர்வாத்துக்கு, எட்டு மாத சிறைத் தண்டனையும், குழாய் பொருத்தும் வேலைக்கு ஆயுட்காலத் தடையும், பாலியல் குற்றவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் பத்து வருடங்களுக்கு கையொப்பமிடவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.