எமது அணி வீரர்களிடத்தில் உறுதியான நம்பிக்கை மேலேங்கியுள்ளது. அதே மனநிலையுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது போட்டியிலும் விளையாடுவார்களென்ற நம்பிக்கை எனக்குள்ளதென இலங்கை அணியின் டெஸ்ட் அணித் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் கேட்டகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

முதலாவது போட்டியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம். நாளை இடம்பெறவுள்ளது புதிய போட்டி. அதற்கு நாம் சரியான முறையில் தயார்ப்படுத்தி வருகின்றோம். எனவே அடிமட்ட நிலையில் இருந்து போட்டியை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் அணியை வழிநடத்துவதற்கு சக வீரர்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பை நல்கினர். வீரர்களிடம் உயர்ந்த அளவில் நம்பிக்கை காணப்பட்டது.

ஆகவே முதல் போட்டியில் வெளிப்படுத்திய நம்பிகையை 2 ஆவது  போட்டியிலும் வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விரர்களின் பெயர் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று மாலை அல்லது நாளை காலை வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும். 

சரவணமுத்து ஓவல் மைதானம் விசேசடாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம். இருப்பினும் குறித்த ஆடுகளம் இறுதிநாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். ஆகையால் நாம் முதலிரண்டு நாட்களும் வேகப்பந்து வீச்சாளர்களை உபயோகித்து விட்டு இறுதி நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு எண்ணியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாகும் போட்டி பங்களாதேஷ் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகவும் இறுதிப் போட்டியாகவும் காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணி தனது 100 ஆவது டெ்ஸ்ட் போட்டியை விளையாடவுள்ளமையே முக்கிய அம்சமாகும். எனவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பங்களாதேஷ் அணி இலங்கை அணியை தோற்கடித்து போட்டித் தொடரை சமநிலைப்படுத்த முயற்சிசெய்யலாம்.

இதேவேளை, இப் போட்டிக்கு காலநிலை சாதகமாக அமையுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.