ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய அனுஷ்டானங்களும் மர நடுகை நிகழ்வுகளும் நாளை வெள்ளிக்கிழமை (08) இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயம், மங்களராமய விகாரை, ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் புனித மரியாள் பேராலயம் ஆகியவற்றில் நாளை காலை விஷேட சமய வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், கோட்டைப் பூங்கா மற்றும் மாவட்ட செயலகவளாகம் ஆகியவற்றில் மர நடுகையும் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வுகளில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாகவும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகவும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)