முல்லைத்தீவு இராணுவ  படைத்தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த தொடர் போராட்டம்  இன்று பதினோராவது நாளாக தொடர்கின்றது.

இந்நிலையில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் யாரும் எந்த முடிவுகளையும் எடுக்காத நிலையில்,  இன்றைய தினம் விவேகானந்தன் தியீபன் வயது (28) மற்றும் பொன்னுத்துரை அழகராஜா வயது (55) ஆகியோர் தமக்கான தீர்வு கோரி  சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். 

இந்நிலையில் இன்று நண்பகல் ஒரு மணியளவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் இவர்கள் இருவரும் ஏன் தமது சொந்த  காணிக்கு செல்ல தங்களை வருத்தவேண்டுமென கொதித்தெழுந்து மக்கள்  இராணுவ முகாம் வாயிலை நோக்கி கோசங்களை எழுப்பியவாறு சென்று இராணுவ முகாம் வாயிலை பத்து நிமிடங்கள் வரை மறித்து  இராணுவத்தை திட்டித்தீர்த்ததோடு தமது காணிகளை விடுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இந்தமக்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக  ஒளிப்பதிவு செய்த இராணுவத்தினர் ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில், தாம் வெளிப்படையாக மின்குமிளில் பொருத்திய கமராவை கழற்றி, தற்போது நவீன கமரா ஒன்றை இரகசியமாக பொருத்தி மக்களை ஒளிப்பதிவு செய்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.