யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இருந்து தாய் நாட்டிற்கு வந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சொந்த இடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய விஜயரூபன் சர்மிளா (37வயது) எனும் பெண்ணே உயிரிழந்தவராவர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி அங்கே வசித்துவந்துள்ளார்.இவருக்கு 11வயது மற்றும் 3 வயதுகளில் இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த நாட்டிற்கு தனது பிள்ளைகள் இருவருடனும் வருகை தந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை இவர் தனது மாமனாருடன் யாழ்ப்பாணம் நகரத்திற்கு பொருள் கொள்வனவிற்காக சென்றுவிட்டு இரவு ஏழு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது மண்கும்பான் பகுதிக்கு அண்மையில் வீதியில் இவர்களுக்கு முன்னால் உழவு இயந்திரம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. 

இதனை கவனிக்காத மாமனார் இருட்டில் உழவு இயந்திரம் பயணித்துக்கொண்டிருப்பதாக நினைத்து மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் உழவு இயந்திரத்திற்கு அண்மையில் சென்றதுமே உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்த மாமனார் உடனடியாக மோட்டார் சைக்கிளை வீதியின் வலது பக்கம் திருப்பியுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளின் நிலை தடுமாறியதால் பின்னால் இருந்து வந்த குறித்த பெண் கீழே வீழ்ந்துள்ளார்.

அதேசமயம் ஊர்காவற்றுறையில் இருந்து அவர்களுக்கு எதிர்திசையில் வந்த கார் ஒன்று குறித்த பெண்ணின் மீது மோதியுள்ளது. இதனால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.