பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது.  

பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. 

குறித்த ஆய்வானது  லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆய்விற்கு செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலை என்பன உருவாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வழங்கிய, அறிவுரை மற்றும் வடிவமைப்பு மாதிரிகளை கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கியூசாட்டில் உருளைக்கிழங்குகள் நடப்பட்டன. இதற்கான பிரத்தியேக கியூப்சாட்டினை லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் வடிவமைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆய்வின் பலனை கொண்டு, கியூப்சாட்டில் கட்டமைக்கப்பட்ட கடுமையான சுற்றுச்சூழலில், உருளைக்கிழங்கு வளரும் என்றால், இவை செவ்வாய் கிரகத்திலும் வளர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், அத்தோடு குறித்த பயிர்செய்கைகள் தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, இலகுவாக வளரும் உருளை கிழங்கு வகை கண்டறியப்படும் என லிமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.