ஆச்சரியம் தந்த 14 வயதுச் சிறுவனின் கண்டுபிடிப்பு!

Published By: Devika

09 Mar, 2017 | 04:00 PM
image

சரித்திர பாட வகுப்புக்காக தனது வயலை ஆராய்ச்சி செய்த சிறுவன் ஒருவன், இரண்டாம் உலகப் போரின்போது வீழ்த்தப்பட்ட விமானத்தின் பெரும்பாகத்தையும், விமானியின் உடல் எச்சங்களையும் கண்டுபிடித்துள்ளான்.

டேனியல் க்றிஸ்டியான்சென் (14) என்ற சிறுவன் டென்மார்க்கைச் சேர்ந்தவன். சரித்திர பாடத்தில் ஆர்வம் உள்ள டேனியல், பழைய இரும்புத் துண்டுகள் ஏதேனும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில், இரும்பைக் கண்டறியும் ‘மெட்டல் டிடெக்ட்டரு’டன் தனது தந்தைக்குச் சொந்தமான வயல் வெளியில் ஆராய்ந்துகொண்டிருந்தான்.

அப்போது நிலத்தின் ஒரு பகுதியில் உலோகம் இருப்பதற்கான சமிக்ஞைகள் கிடைத்தன. ஓரிரு மீற்றர்கள் தோண்டியபோதும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சமிக்ஞைகள் தொடர்ந்து வந்தபடியால் தன் தந்தையின் உதவியுடன் நிலத்தைத் தோண்டும் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி குறித்த நிலப்பகுதியைத் தோண்டினான்.

அப்போது, சுமார் எட்டு மீற்றர் ஆழத்தில் இரும்புச் சிதைவுகளும் மனித எலும்புகளும் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது விமானம் ஒன்று விழுந்ததாகவும், அதன் பின்னர் ஜேர்மனியர்கள் அதை அப்புறப்படுத்தியதாகவும் கூறியது டேனியலுக்கு ஞாபகம் வந்தது. இது குறித்து டேனியலின் தந்தை அரச அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

இதன் பேரில் அப்பகுதியை ஆராய்ந்த அரச ஆய்வாளர்கள், அது இரண்டாம் உலக யுத்தத்தின்போது வீழ்த்தப்பட்ட ஜேர்மனிய விமானம்தான் என்பதையும், அதில் இருந்த எலும்புக்கூடு விமானியினுடையது என்றும் உறுதி செய்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right