இலங்கை சிறையிலுள்ள 85 தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய சிறையிலுள்ள 19 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு, இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக, மீனவர்களை விடுதலை செய்யும் முடிவை இரு நாடுகளும் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீனவர் சுடப்பட்டு இறந்த சம்பவத்தால், தமிழகம் முழுவதும் மீனவர்கள் இலங்கை அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, இந்திய அரசும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பதற்ற நிலையை தனிப்பதற்கான செயற்பாடாக, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதோடு, இந்திய கடற்பகுதியிற்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்டு, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 19 பேரை, இந்திய அரசும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.