தொலைக்காட்சி போட்டியொன்றில் முஸ்லிம் பெண் ஒருவர் இந்து பக்திப் பாடல் ஒன்றைப் பாடியமை சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கர்நாடகா தொலைக்காட்சியொன்றில் சிறந்த பாடகருக்கான போட்டியொன்று நடைபெற்று வருகிறது. இதில், சுஹானா சயீத் என்ற 22 வயதுப் பெண் ஒருவரும் பங்கேற்று, மிகச் சிறப்பான முறையில் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் ஒளிபரப்பான குறித்த போட்டி நிகழ்ச்சியில், இந்து பக்திப் பாடல் ஒன்றை சுஹானா பாடியிருந்தார். மிக அருமையாக அவர் பாடியதால், பார்வையாளர்கள் சுஹானாவுக்கு தமது ஏகோபித்த பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ஆனால், சமூக வலைதளங்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாக அமைந்துவிட்டது.

மங்களூர் முஸ்லிம்ஸ் என்ற சமூக வலைதள இயக்கம் ஒன்று முஸ்லிம் பெண்ணொருவர் எவ்வாறு இந்து பக்திப் பாடலைப் பாடலாம் என்ற ரீதியில் சுஹானா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுவரை சுமார் நாற்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுஹானாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“நீ ஒன்றும் பெரிய சாதனையைச் செய்துவிடவில்லை. பர்தாவை அணிந்துகொண்டு இந்துப் பாடல் பாடியது இழிவான செயல். உன் பெற்றோர் நரகத்துக்கே செல்வார்கள். உன்னை மற்ற ஆடவர்களுக்கு முன் வெளிப்படுத்திவிட்டாய். பர்தாவுக்கு மரியாதை தரத் தெரியாத நீ அதை அணிவதை நிறுத்திக்கொள்” என்று கடுமையான வார்த்தைகளால் சுஹானாவை விமர்சித்துள்ளனர்.

என்றபோதும், சுஹானாவுக்கு ஆதரவான கருத்துக்களும் குவிந்துகொண்டே இருக்கின்றன. “பிற சமயங்களையும் மனிதர்களையும் மதிக்கும் பண்பை இஸ்லாம் கற்றுத் தருகிறது. பிறகு நாம் ஏன் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள வேண்டும்? அதீத திறமையுள்ள சுஹானாவுக்கு முதலிடம் கிடைக்கப் பிரார்த்திப்போம்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுஹானாவுக்கு ஆதரவான சிலர், அவருக்கு எதிராகப் பதியப்படும் கருத்துக்களைத் தடுத்து நிறுத்தக் கோரி சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.