சிறுவர் மற்றும் இளைஞர் பராமரிப்பு விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 இளம் பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம், மத்திய அமெரிக்க நாடானா குவாதமாலாவில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி விடுதியில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பதின்ம வயதுப் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த விடுதியில், அளவுக்கதிகமான உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான இளம் உறுப்பினர்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடத் திட்டமிட்டிருந்தனர். தாம் தப்பியோடுவதை யாரும் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக, விடுதியில் இருந்த மெத்தைகளுக்குத் தீமூட்டினர்.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ஏனைய சிறுவர், சிறுமியர் மற்றும் இளம் பெண்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட  களேபரத்திலேயே 21 இளம் பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் நாற்பது பேர் கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.