பேட்டியொன்றின்போது, இளம் பெண்கள் குறித்து மேனகா காந்தி பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் மேனகா காந்தியின் பேட்டியொன்று இடம்பெற்றது. அதில் அவர், பெண்கள் உணர்ச்சிவசப்படும் நிலையில் தவறுகள் இழைத்து விடாமல் இருக்க, ‘குறித்த நேரத்திற்குள் வந்துவிட வேண்டும்’ என்ற பெண்கள் விடுதிகளின் விதிமுறை அவசியமானது என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதுடன், கடும் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளது.

இந்தியாவில் நிகழும் பாலியல் பலாத்காரங்கள் பெண்களால்தான் நடத்தப்படுகின்றனவா என்றும் உணர்ச்சிவசப்படும் ஆண்களைத்தான் அறைகளுக்குள் பூட்டி வைக்க வேண்டும் என்றும் பெண்ணின் உடலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.