இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று நடைப்பெறுகின்ற இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு நேற்று திங்கட்கிழமை இந்தோனேசியாவை சென்றடைந்தது.

இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ ஹட்டா சர்வதேச விமான நிலையத்தைச் நேற்று பிற்பகல் சென்றடைந்தனர்.

இந்தோனேசியா அரசாங்கத்தின் சார்பாக அந்நாட்டின் பொதுப் பணிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

பின்னர்  இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேசியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கலந்துக் கொண்டார்.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் பேண்தகு மற்றும் சமாந்தரமான அபிவிருத்தியை  நோக்காகக்கொண்டு செயற்படும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவிற்கு சமகாலத்தில் இம்முறை அரச தலைவர்களின் மாநாடு கோலாகலமாக நடைபெறுகின்றது.

இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான மற்றும் சுபீட்சமான வலயமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பினை வலுப்படுத்தல் என்பதே இவ்வருடத்தின் தொனிப்பொருளாகும். 

எவ்வாறாயினும் இலங்கை மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கிடையில் மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இரண்டும் கைச்சாத்திடப்படவுள்ளன.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் பீ.இராதாகிருஷ்ணன், சுஜீவ சேனசிங்க உள்ளிட்டோர் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.