பொலிஸ்மா அதிபர் தலைமையில் கடந்த 18.06.2016 அன்று வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் சமாதான விகாரையின் புனர் நிர்மானம் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த விகாரை இன்று காலை 6.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

27 அடி உயரமானதும் 44 அடி சுற்றுவட்டம் உடைய குறித்த சமாதான விகாரைக்கு இலங்கை பொலிஸ் திணைக்கள பௌத்த மத பிரிவிலுள்ள பொலிஸ் அதிகாரிகளால் நிதி உதவியளிக்கப்ட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் சமூக பொலிஸ் பிரிவிலுள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சர்வமத ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஒரு அங்கமாக நூல் வெளியீடு, மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் கர்ப்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு, வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரா, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமத்திய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், யுத்தத்தினால் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.