இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும், 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 17ஆம் திகதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்களையும், படகுகளையும் விடுதலைசெய்ய வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். இதனையடுத்து பாம்பன் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் நாளாக ஆரம்பமாகியுள்ளது.

இதனால் 200க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் இன்றி காணப்படுகின்றனர்.

இதனைதொடர்ந்து இன்று பாம்பனில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை காலை பாம்பன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும், 6ஆம் திகதி காலை பஸ் நிலையம் அருகே கண்டண ஆர்ப்பாட்டமும், நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.