ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையளர் செயிட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றை வரவேற்பதுடன் அவற்றை முழுமையான நடைமுறைப்படுத்தபட வேண்டும்.

குறித்த அறிக்கையின் பிரகாரம் சில கடினமான பாதைகளை கடந்து செல்ல முடிந்துள்ளது. அந்த வகையில் புதிய  அரசியலமைப்பு உருவாக்கம் போன்ற முக்கியமான விடயத்தில் பங்காற்றினாலும்  அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் எந்த அளவு தூரம் செயற்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாகவே உள்ளது.

காணி விடுவிப்பு அரசியல் கைதிகளை விடுவித்தல் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதல் சாட்சியாளர்களையும் சந்தேக நபர்களையும் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் மறுசீரமைப்பு பாதுகாப்பு படையினரின் செல்வாக்கு போன்றனவற்றில் திருப்திபடக்கூடிய ஒரு நிலைமை இல்லை.

அரசாங்கம் குறித்த பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுபறி நிலைக்குள் இட்டுச் செல்லுமாயின் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது போய்விடும். நாம் தொடர்ந்தும் பொறுப்பு கூறல் விடயங்களில் உள்ள மந்தகரமான செயற்பாடுகளை பற்றி கவனமெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் அரசாங்கத்துக்கு குறித்த கால எல்லைக்குள் செயற்படுத்தப்பட வேண்டிய தீர்மானங்களை அடையாளப்படுத்தியிருந்தோம். சிறப்பு நீதி மன்றத்துடன் கூடிய சர்வதே பங்களிப்பு அவசியம் என்ற வகையில் கட்டமைப்பொன்றை அமைக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தோம்.

அந்த வகையில் நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலும் அதில் அரசாங்கத்தின் அசமந்த போக்கு தொடர்பிலும் வௌிப்படுத்தியிருந்தோம். இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வேதனைகளும் அவர்களை கண்டு பிடிப்பதற்கான அவசியம் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் செயற்படவேண்டிய விடயம் தொடர்பிலும் அதற்கான மேற்பார்வை தொடர்பிலும் தெரிவித்துள்ள கருத்துகளை வரவேற்கிறோம்.

மனித உரிமை ஆணையாளரினால் தெரிவிக்கபட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை உணர்ந்து அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.