யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன் வலி.வடக்கில் இராணுவத்தினரிடம் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிப்புஇ விமானப் படையினருக்கான விமானத்தளம் அமைப்பது தொடர்பான காணி சுவீகரிப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக் கலந்துரையாடலில் முப்படைத்தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வடபிராந்தியத்திற்கு பொறுப்பான முப்படைத் தளபதிகள்இ யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வலி.வடக்கில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களது காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் விமா னப் படையினர் தமக்கான தளமொன்றை அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி, முப்படை தளபதிகள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
இந்த முக்கிய கலந்துரையாடலை அடுத்து இராணுவத்தின் 10ஆவது ரெஜிமண்ட் பொறியியல் பிரிவினரின் சாதனைகள் தொடர்பான பரிசளிப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து மு.ப. 11 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் "ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலையமொன்றை திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்விலேயே தெல்லிப்பழை பகுதியில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டங்களின் உறுதிப்பத்திரங்களையும் வழங்கி வைக்கவுள்ளார்.
இந் நிகழ்வுக்கு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நிகழ்வுகளை நிறைவு செய்யும் ஜனாதிபதி மாலை 3 மணி தொடக்கம் மாலை 3.55 மணிவரை மீண்டும் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். பின்னர் நான்கு மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது காணி விடுவிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புக்கள் ஜனாதிபதியால் வெளியிடப்படலாம் எனவும் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.