கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதால்  கடல்வளங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புத்தளம் கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக மீன்பிடித்துறை அமைச்சு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையிலேயே எமது கடற் பகுயை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கற்பிட்டி கடற்பகுதிக்கு சென்று பார்வையிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் ஹப்புஹாமி, அசோக பிரியந்த மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் கற்பிட்டி கடலில் குதித்து அங்குள்ள பவளப்பாறைகள் அழிந்துள்ள விதம் குறித்து  கண்டறிந்துள்ளனர்.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

நாட்டின் தேசிய வளங்களாக கருதப்படும் பவளப்பாறைகள் விசேடமாக டொல்பின் மற்றும் திமிங்கலம் ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையின் முதலாவது கட்டமாக நாம் கற்பிட்டி கடற்பகுதியை வந்து பார்வையிட்டோம். எதிர்கால சந்ததியினரை கருத்திற் கொண்டு அரசியல் குரோதங்களை மறந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன் பிடிப்பதற்கு மீன்பிடித் துறை அமைச்சு  அனுமதிப் பத்திரம் வழங்கியுள்ளது. மீன்பிடி அமைச்சர் வேண்டுமென்றால் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் இல்லாமல் இருக்கலாம். எனினும் அமைச்சின் சட்டங்கள் இப்பகுதியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். எமது வளங்கள் அழிந்து போவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.