இலங்கையிடம் சிக்கன பொருளாதார முறையை ஞாபகப்படுத்தி, பொருளாதார உறுப்புகளை தக்கவைத்து கொள்வதை வலியுறுத்தவே சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லகார்ட் எதிர்வரும் 21 ஆம் திகதி, முதல் முறையாக இலங்கை வருகின்றார். 

இலங்கையின்  பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல், அடுத்த கடன் தொகைக்கான சூழலை பரிசீலித்தல் மற்றும் இலங்கையில் பொருளாதார சிக்கனமுறைகளை ஏற்படுத்துவதற்கான வலியுறுத்தல்களை மேற்பார்வை செய்தல் என்பன இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரைச் சந்தித்து இலங்கையின் நிதி திட்டமிடல்குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கடந்தாண்டு ஆறு தவணைகளில் திருப்பி தரும் நிபந்தனையின் கீழ் வழங்கப்பட்ட கடன் தொகையான 1.5 பில்லியன் அமெரிக்க டொலரானது,  இலங்கையின் உடனடி அந்நிய செலாவணி நெருக்கடி அபாயத்தை தீர்த்த நிலையில், நாட்டின் சர்வதேச நிதியியல் எதிர்மறை தரமிடலில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என பொருளாதார நிபுணர் குழுவால் விமர்சனமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை அரசாங்கமானது பெறுமதி சேர் வரி (VAT) 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியமை, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீராக்கம் செய்தமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை சந்தைநிலையை கொண்டு நிர்ணயிக்க செய்தமை, நாணய விகித பெறுமானத்தை சராசரியாக பராமரித்தல் போன்ற திட்டமிடல்களை செயற்படுத்தியிருப்பினும், நாட்டின் பொருளாதார இருப்புகளில் வீழ்ச்சி நிலையே பிரதிபலிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பிரமாண்டமான கடன் சுமை மற்றும் அந்நிய செலாவனி அதிகரிப்பு நெருக்கடியுடனேயே இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றதுடன், திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகையானது 4.56 பில்லியன் டொலர்களாக அதிகரித்ததுள்ளது. 

2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட, பற்றாக்குறையை அரசாங்கம் கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு 5.4 சதவீதமாக இருந்ததை 2020 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்திருந்தது.

மேலும் அரசவுடமையாகவுள்ள இலங்கை விமான சேவை, கொழும்பு ஹில்டன் விடுதி மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தி, அதனுடாக ஈட்டப்படும் சுமார் 1.5பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியதிற்கு செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையானது இவ்வருடம் 3.6 பில்லியன் டொலர் கடனையும், வட்டியையும் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்குட்பட்டுள்ளது. இது கடந்த வருட தேவையை விட இரு மடங்காகும். இநிலையில் இலங்கை அரச முதலீட்டு பாதுகாப்பு  நிறுவனமாக செயற்பட்ட பிராங்க்ளின் நிறுவனம், புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின், உலக பொருளாதார கொள்கை காரணமாக வட்டி வீத அதிகரிப்பை எதிர்நோக்கி தனது முதலீட்டை திரும்ப பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கையானது தனது பொருளாதார வீழ்ச்சியை சரி செய்துகொள்ள சுகாதார மற்றும் கல்வித்துறைகளில் தனியார்மயப்படுத்தலை மெதுவாக உருவாக்கிவருகின்றது. குறித்த நிகழ்வுகளுக்கு மத்தியில் தொழிலார்களும் தமது பொருளாதார கோரிக்கைகளை தொடர் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் அரசின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவே சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க செய்து வருகின்றது.

இச்சூழலில் சர்வதேச நாணய நிதியம் தனது கட்டுப்பாடுகளை இலங்கையில் திணிக்க முனைவது, நேரடியாகவே சாதாரண மத்தியதர வர்க்கத்தை, தாக்க கூடிய சூழலை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.