இன்றைய திகதியில் எம்மில் பலரும் நீரிழிவு, இரத்த அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்ட பலவிதநோயுடன் உலா வருவதை தவிர்க்க முடியாது என்று உணர்ந்திருக்கின்றனர். ஆனால் அதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றாலும் அதில் தான் போதிய அளவிற்கு விழிப்புணர்வு பெறாமல் இருக்கிறார்கள். அதிலும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் விரைவில் பாதம் மற்றும் காலில் சத்திர சிகிச்சைசெய்து கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருக்கிறார்கள். 

எப்படி என்று கேட்டால், உதாரணமாக ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.மருத்துவர்கள் அவருக்கு மாதந்தோறும் சர்க்கரை நோய் குறித்த பரிசோதனையையும், HbA1C பரிசோதனையையும் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்பதை தொடர்ச்சியாக 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்து கொண்டு இரத்த சர்க்கரையின் அளவு 180க்குள் தானே இருக்கிறது என்று விட்டுவிடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் அடுத்த 6 மாதத்திற்கு ஒரு முறை தான் பரிசோதித்துக கொள்கிறார்கள். அதன்போது இரத்த சர்க்கரையின் அளவு 200 ஆக இருந்தால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். விளைவு அவர்களின் கால்களில் புண் ஏற்படுகிறது. போதிய உடற்பயிற்சியின்மை, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமை, HbA1C பரிசோதனையின் சர்க்கரையின் அளவை 7க்குள் வைத்திருக்கவேண்டும் என்ற அறிவுரையை ஏற்காமை போன்ற இந்த காரணங்களினால் தான் அந்த நோயாளியின் காலில் புண் ஏற்பட்டு, சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதற்கான மருத்துவ விளக்கம் என்னவெனில் ஒவ்வொரு நாளும் எம்மால் கட்டுப்படுத்த இயலாத சர்க்கரை, அதிகரித்து எம்முடைய இரத்த குழாயில் படிந்து சேதத்தை உருவாக்குகிறது.

அதனால் சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவைகட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். மாதந்தோறும் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின் படி நடக்கவேண்டும். இதனை பின்பற்றினால் தான் சர்க்கரையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளாமல் தடுக்க இயலும்.  

டொக்டா ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.