இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குணதிலக ஆகியோர் அரைச்சதத்தை கடந்து முதல் விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இணைந்துள்ள திசர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 35 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை அணி 48.1 ஓவர்களில் 278 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை போட்டியின் இடைநடுவில் மழை குறுக்கிட்டது. இதனால் அணிக்கு 48 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

பந்துவீச்சில் இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பாக கிரிங் ஓவர்டன்  46 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி 290 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றிருந் போது மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதனால் இலங்கை அணிக்கு டக்கவர்த் லூவிஸ் முறைப்படி 47 ஓட்டங்களால் வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது.