ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மீணடும் கால அவகாசத்தை வழங்குவதாயின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழேயே கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் செனட்டர்கள் குழுவினரிடத்தில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டின் செனட்டர்கள் குழுவினருக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டின் செனட்டர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது புதிய அரசியலமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக அபிவிருத்தியை கருத்திற்கொண்டு  அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மேலும் அதிகமாக வழங்கப்படவேண்டும். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அந்த தீர்மானத்தில் குறைந்தளவிலான விடயங்களையே இலங்கை அரசாங்கம் அடைந்துள்ளது. 

அவ்வாறான நிலையில் அவ்வாறானதொரு கால அவகாசத்தை வழங்குவதாயின் இலங்கை அரசாங்கத்திற்கு அத்தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக கடுமையான நிபந்தனைகளின் கீழேயே கால அவகாசம் வழங்கப்படவேண்டும். 

அத்துடன் குறித்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் இழப்பீட்டை வழங்க வேண்டும்.  மீண்டும் நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். பொறுப்புக்கூற வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த உத்தரவாதங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும் என பிரான்ஸ் செனட்டர்கள் குழுவினரிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுடான சந்திப்பில் இலங்கை பிரான்ஸ் நட்புறவு மையத்தின் தலைமையதிகாரியும் செனட்டருமான மரியா கிறிஸ்டின் பிளன்டின் தலைமையிலான குழுவில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மீன் மரீன் சுவா, செனட்டர் மிரில்லி ஜூவே, செனட்டர் பெட்ரிக் ஸைஸ்இ செனட்சபை ஆலோசகர் ஒலிவர் டெலமரே மற்றும் பிரான்சிய தூதுவராலயத்தின் துணைத்தலைவர் இசேபெலி மிஸ்கொட் ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.