மாலபே தனியார் வைத்திய கல்லூரியின் (சைட்டம்) பிர­தான நிறை­வேற்று அதி­காரி வைத்­தியர் சமீர சேனா­ரத்­னவின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை திட்டமிட்டு, அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற வாகன சாரதி ஆகியோரை கைதுசெய்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சைட்டத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி வைத்­தியர் சமீர சேனா­ரத்­னவுக்கும், சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினருக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்தே பொலிஸ் தலைமையகம் குறித்த விடயத்தினை வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 5 துப்பாக்கி ரவைகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வேறு ஒரு குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.