மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் நபரொருவர் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயமடைந்த நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து சிவகீதாவின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயரின் கணவர் கனகசபை பிரபாகரன் (வயது 47) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் அறைகள் வாடகைக்கு விடப்படும் என்ற பெயரில் வீட்டின் ஒரு பகுதியில் வைத்து இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் பிடிக்கப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் பிரபாகரன் ஆகியோரும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி நான்கு சந்தேக நபர்களும் தலா 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல  நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டுமெனவும் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக கடந்த 2008 தொடக்கம் 2013 வரையில் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.