தனியார்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் உயர்கல்வி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் தொடர்பில் தரப்படுத்தலை மேற்கொள்ள புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உலக வங்கி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வரும் புதிய சட்ட மூலமானது இன்னும் இரு மாதங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய சட்டமூலத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்துக்கு அமையவும் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவும் குறித்த சட்டமூலம் உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த சட்டமூலம் சைட்டம் கல்லூரியினால் வழங்கப்படும் மருத்துவ கல்விக்கும் உட்பட்டதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் எண்ணிலடங்காத பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் குறிப்பாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமைத்துவத்துக்கான பட்டப்படிப்புகளை தனியார் நிறுவனங்களில் பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே இவர்களின் கல்வி தரத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட உள்ளது என தெரிவித்தார்.