வவுனியாவில் நேற்று (24)  மாலை வயலில் வெட்டப்பட்டு வந்த நெல் மூட்டைகளை திருடிய போது அவர்களைத் துரத்திச் சென்ற பொதுமக்கள் நெல் திருட பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி, இரு சந்தேக நபர்களையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று காலையிலிருந்து வவுனியா பேயாடிகூளாங்குளம் இராணுவ முகாமிற்கு அருகிலிருந்த வயலில் உரிமையாளர் தனது நெல்லை அறுவடை செய்து கொண்டிருந்த போது பிற்பகல் வேளையில் அங்கு முச்சக்கரவண்டியில் சென்ற மூவர் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை களவாடிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து பொதுமக்கள் உரிமையாளருக்கு தகவல் வழங்கியதையடுத்து திருடியவர்கள் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளனர். 

எனினும் துரத்திப் பிடித்தபோது முச்சக்கரவண்டி சாரதி மற்றும் உதவியாளர் பிடிபட்டுள்ளதுடன், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இதில் முக்கிய நபரான முன்னாள் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர்  தப்பி  தலைமறைவாகியுள்ளதாக நெல் மூட்டை பறிகொடுத்த வயலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

தற்போது முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தப்பி ஓடியவரின் சகோதரர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 10 மூட்டை நெல் திருடப்பட்டுள்ளதுடன், ஒரு மூட்டை நெல் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.