இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் இலங்கைக்கு வலியுறுத்தப்பட்ட அணைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் நிறைவேற்று  ஐ. நா பேரவை அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரம் எம் பி தெரிவித்தார்.

கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விவகாரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

இலங்கையின் இறுதிக்கட்ட போர் குறித்து இலங்கை அரசாங்கதின் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் ஒருசில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் நல்ல நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் மக்களின் பிரதான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நகர்வுகள் மோசமானதாகவே அமைந்துள்ளது.

காணாமல் போனோர், இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் பொறிமுறைகள் திருப்தியான வகையில் அமையவில்லை. கடந்த ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை மேற்கொள்ளும் என  கொடுத்த வாக்குறுதிகள் எவையும் பூரணப்படுத்தப்பட வில்லை. இந்நிலையில் மேலும் கால அவகாசம் வழங்க இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. 

கால அவகாசம் நிராகரிக்கப்படுகின்றது என்றால் இலங்கை பூரணப்படுத்தியுள்ளது என கருதப்படலாம். ஆகவே இன்னும் சிறிது காலம் இலங்கை அரசாங்கத்தினருக்கு கால அவகாசம் வழங்க வாய்ப்புகள் உள்ளது. எவ்வாறு இருப்பினும் கால அவகாசம் வழங்கப்பட்டாலும் அது குறுகிய கால அவகாசமாக அமைய வேண்டும்.அதேபோல் கொடுக்கப்படும் காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பழைய தீர்மானங்கள் அனைத்தையும் முளுமைப்படுத்தப்பட வேண்டும். வழங்கப்படும் காலத்தில் இலங்கை பொறுப்புக் கூறல் விடயத்தில் முழுமையாக செயற்படும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயொகிக்க வேண்டும். இந்த விடயங்களை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல் இலங்கை அரசாங்கம் கால அவகாசங்களை கோருவது தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்தும் எண்ணத்தில் அமைய வேண்டுமே தவிர அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலோ அல்லது காலத்தை கடத்தும் வகையிலோ செயற்படக் கூடாது. அரச தப்பினருக்கும் அதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.