இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.   அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்  என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் உரையாற்றுகையில் 

பாகிஸ்தானுக்கும் – இலங்கைக்கும் இடையே இராணுவப் பரிமாற்றம் தொடர்ந்து இடம்பெறும். அதேவேளை இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்  

  உலக மயமாக்கல் விடயங்களில் இலங்கையுடன் எம்மால் பொது உடன்பாட்டுன் செயற்பட முடிந்துள்ளது. இது தொடர்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்.  

அதேவேளை இலங்கையில் சீனி மற்றும் சீமெந்து உற்பத்திகளுக்கான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் இரு தரப்பினருக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

இன்று நாம் பல உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளோம். இது இரு நாடுகளுக்கிடையான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

இலங்கையில் எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான, கௌரவமிக்க வரவேற்புக்கள் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான மங்கள சமரவீர, லக் ஷ்மன் கிரியெல்ல, டாக்டர் ராஜித சேனாரத்ன, நிரோஷன் பெரேரா, எஸ்.பி.நாவின்ன உட்பட பலர் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், வர்த்தக அமைச்சர் உட்பட முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.