தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த இளம் தந்தையொருவர், தன் மனைவி பெண் குழந்தையைப் பெற்றதையடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சூரத்தில் இடம்பெற்றுள்ளது.

அமித் சஹானி (25) என்பவர் சூரத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பாரந்தூக்கி இயக்குனராகப் பணிபுரிகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. மனைவி பூஜா கருத்தரித்ததையடுத்து, தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று ஏக நம்பிக்கையில் இருந்தார் அமித்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார் அமித். அங்கு அவரது மனைவி பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இதனால் கடும் அதிர்ச்சியுற்றாலும், மனைவிக்குத் துணையாக இரண்டு நாட்கள் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்தார் அமித்.

மிகவும் களைத்துப் போயிருப்பதாகவும், ஓய்வெடுக்குமாறும் உறவினர்கள் வற்புறுத்தியதையடுத்து வீடு திரும்பிய அமித், மனைவியின் புடைவை ஒன்றை எடுத்து மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்கினார்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் அவர் தூக்கிட்டதாலேயே மரணித்ததாக வைத்திய ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும் விசாரணைகள் தொடர்கின்றன.